Best Gynecologist in Mylapore, Chennai
கருகலைதல் திரும்பத் திரும்ப நிகழும் இடர்களை குறைக்க உண்மையல்லாத கட்டுக்கதைகளையும், ஊகங்களையும் நிராகரியுங்கள்; அறிவியல் உண்மைகளையும், அது சார்ந்த செயல் உத்திகளையும் பின்பற்றுங்கள்.

கருத்தரித்த பிறகு ஒருசில வாரங்களுக்குள்ளேயே இயல்பாகவே கருக்கலைந்தபோது குழந்தைப்பேறின் மூலம் தாயாகும் கனவை சுமந்திருந்த அந்த இளம் பெண்ணின் ஆனந்தம் குறைந்த நாட்களே உயிர்ப்புடன் இருந்தது. கர்ப்பம் கலைந்த சோகத்தை சமாளிக்க அப்பெண், கடும் சிரமப்பட்ட நேரத்தில், உடன் பணியாற்றும் ஒரு மூத்த பெண் பணியாளர், தவறான உணவுகளை உட்கொண்டதே இதற்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று கருத்து தெரிவித்தார். இந்த வார்த்தைகள் அந்த இளம்பெண்ணின் மனதில் ஆழமாக பதிந்தன. சில மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் கருவுற்றபோது, சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் ஒரு கடுமையான வெஜிடேரியனாக அப்பெண் மாறினார். எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்த்த அவர், அவருக்கு மிகவும் பிடித்தமான தேநீர் அருந்துவதை கூட நிறுத்திவிட்டார்.
ஆனால், கர்ப்பம் கலைதல் என்ற அந்த சோக நிகழ்வு அப்பெண்ணிற்கு மீண்டும் நேர்ந்தது. கவலையும், ஏமாற்றமும் மனதைப்பிழிய இந்நிகழ்விற்கான காரணங்களை அவர் தேடினார். கடும் நெருக்கடிகளுக்கிடையே அலுவலகத்திற்கு தினசரி சென்று வரும் சிரமமும் மற்றும் அவரது அடுக்குமாடி வீட்டிற்குச் செல்ல பல படிகட்டுகளில் ஏற வேண்டிய நிர்பந்தத்தால் ஏற்படும் அழுத்தமுமே தான் செய்த மோசமான தவறுகள் என்ற சுயமாகவே அவர் காரணங்களை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் அடுத்தமுறை மீண்டும் கருத்தரித்தபோது பயணங்களை தவிர்த்து, வெளியே சென்று வரும் நிகழ்வுகளையும், தனது நடமாட்டத்தையும் கூட மிகவும் குறைத்துக்கொண்டார். எது நடக்கக்கூடாது என்று அவர் அதிகம் பயந்தாரோ, அது மீண்டும் நிகழ்ந்தது; தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரது வயிற்றிலிருந்த கர்ப்பம் கலைந்த துரதிருஷ்ட சம்பவம் நிகழ்ந்தது. நம்பிக்கையை மட்டுமின்றி, இதற்கான காரணங்களை பகுத்தறியும் செயல்பாட்டிலும் கூட அப்பெண்ணின் ஆர்வம் தொலைந்து போனது. எதிர்பாராத, துரதிருஷ்டமான இந்நிகழ்வுகள் அனைத்துமே தனது விதி என்று அவர் ஏற்றுக்கொண்டார்.
ஒரு சாதாரண இல்லத்தரசியாக மட்டுமில்லாமல், நம்மில் பலருக்கும், ஏன் அறிவியலருக்கும் கூட தரித்த கர்ப்பம் கலைவது என்பது ஒரு மர்மமாகவே பெரும்பாலும் இருக்கிறது. கருத்தரித்ததிலிருந்து 20 வாரங்களுக்குள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான தடவைகளில் கர்ப்பம் கலைவதைத்தான் திரும்பத்திரும்ப நிகழும் கருக்கலைதல் என்று குறிப்பிடுகிறோம். கருவுற்ற பெண்களில் 15-20% நபர்களுக்கு இந்த கருக்கலைவு தொடர்ந்து திரும்பத்திரும்ப நிகழும் இடர் இருக்கிறது என்று அறியப்படுகிறது. ஆனால், இதற்கு பின்புலத்திலிருந்த துல்லியமான காரணங்கள் என்னவென்று 70% நேரங்களில் நாம் அறிவதில்லை. சில நேரங்களில் தாயின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு இயற்கையாகவே கர்ப்பம் கலையுமாறு செய்வதுண்டு. ஆனால், எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகள் அல்லது அசைவ உணவுகள், பயணங்கள் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற விஷயங்களே கர்ப்பம் கலைவதற்கான காரணம் என்று கூறுவதில் துளியளவும் உண்மையில்லை; அதை அறிவியல் ஏற்பதில்லை. அவைகள் வெறும் யூகங்களாகவும், செவிவழி செய்திகளான கட்டுக்கதைகளாகவும் இருக்கின்றன.
திரும்பத் திரும்ப கர்ப்பம் கலைவதற்கு அறிவியல் ரீதியாக நன்கு உறுதி செய்யப்பட்ட காரணங்கள் ஒரு பெரும் பட்டியலாகவே நீள்கின்றன (அதாவது, எஞ்சிய 30% பங்கு அனைத்துமே தெள்ளத்தெளிவாக அறியப்படக்கூடியவை). கருக்கலைதலுக்கான இடர்க்காரணிகளுள் கீழ்க்கண்டவை உள்ளடங்கும்: ஹார்மோன் சார்ந்த சமநிலையின்மைகள் (தைராய்டு ஹார்மோன் அதிகரித்தல் அல்லது குறைதல்), கட்டுக்குள் இல்லாத இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு, மரபணுவியல் பிரச்சனைகள் (குழந்தையிடம் அல்லது பெற்றோர்களிடம்), கருப்பையின் ஒழுங்கற்ற தன்மை மற்றும் இரத்த உறைவுகள் (நாளங்கள் அல்லது சிரைகளை இரத்தக்கட்டிகள் அடைக்கும் நிலை). இத்தகைய இடர்க்காரணிகளை துல்லியமாக பரிசோதனை செய்ய பரிசோதனைகள் இருக்கின்றன. ஒரு நபருக்கு இத்தகைய இடர்காரணி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்படும்போது, அதை நீக்குவது அல்லது அதனை சமாளிப்பது எளிதாகிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, கர்ப்பப்பையில் பிறழ்வுகள் அல்லது ஒழுங்கின்மைகள் இருப்பதை நாங்கள் கண்டறிவோம் என்றால், அதனால் ஏற்பட வாய்ப்புள்ள சிக்கல்கள் மற்றும் கர்ப்பம் கலையாமல் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என இரு விஷயங்களும் எங்களுக்குத் தெரியும்.
வழக்கமாக, முதல் முறையாக கர்ப்பம் கலைந்து விடும்போது எதுவும் குறிப்பிட்ட சிறப்பு பரிசோதனைகள் தேவைப்படாது. இரண்டு தடவைகளுக்கும் அதிகமாக அது நிகழும்போது தான் இந்த சிறப்பு சோதனைகள் அவசியமாக இருக்கும். கருத்தரிப்பு காலத்தின் முப்பருவங்களுள் முதல் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாவது பருவமா என்பதன் அடிப்படையிலும் இப்பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பரிசோதனைகளுள் கீழ்க்கண்டவை உள்ளடங்கும்: கருப்பை அகநோக்கல் (ஹிஸ்டெரோஸ்கோப்பி), உட்கரு பண்பை வரையறுத்தல் (கார்யோடைப்), கருப்பதியத்திற்கு முந்தைய மரபியல் பரிசோதனை, உருப்பெற்ற கருவின் மீது உடற்கூறாய்வு. கருப்பையின் உட்புறத்தை பரிசோதிப்பதற்காக ஹிஸ்டெரோஸ்கோப்பி செய்யப்படுகிறது. முனையில் விளக்கையும், கேமராவையும் கொண்ட ஒரு குறுகிய தொலைநோக்கியான ஹிஸ்டெரோஸ்கோப் - ஐ பயன்படுத்தி இச்சோதனை செய்யப்படுகிறது. கருக்கலைதலுக்கு வழிவகுக்கிறவாறு ஏதும் கர்பப்பை பிறழ்வுகள்/ஒழுங்கின்மைகள் இருக்கிறதா என்று ஹிஸ்டெரோஸ்கோப்பியால் கண்டறிய இயலும்.
உட்கரு பண்பை வரையறுத்தல் (கார்யோடைப்) சோதனையில் கருக்கலைதலை ஏற்படுத்தக்கூடிய மரபியல் கோளாறுகள் அல்லது குரோமோசோமல் குறைபாடுகளை கண்டறிய வளர்கருவின் திசுக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. கருப்பதியத்திற்கு முந்தைய மரபியல் சோதனை, பல்வேறு மரபியல் குறைபாடுகளுக்காக செயற்கை கருத்தரிப்பு (IVF) செயல்முறையின்போது வளர்கருக்களை (எம்ப்ரியோ) ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது (எ.கா. கருக்கலைதல் அல்லது பிறப்பு குறைபாடுகளை விளைவிக்கக்கூடிய ஒரு கூடுதல் குரோமோசோம் அல்லது குறைந்திருக்கும் குரோமோசோம்). கலைந்துவிட்ட கர்ப்பத்தின் வளர்கரு மீது செய்யப்படும் உடற்கூறாய்வு, அதன் உயிரிழப்பிற்கான காரணத்தையும் மற்றும் அதற்கு பங்களிப்பு செய்திருக்கக்கூடிய காரணிகள் / அம்சங்களையும் தீர்மானிக்க அவசியம். அதுமட்டுமன்றி, உடலுறுப்பு கோளாறுகள் / இயல்பற்ற வளர்ச்சியின் காரணம் மற்றும் அளவை கண்டறிவதற்கும் இச்சோதனை தேவைப்படுகிறது.
இத்தகைய சோதனைகளை செய்து கொள்வதற்கு பல தம்பதிகள் தயக்கம் காட்டுகின்றனர். இவைகள் அவசியமற்றவை என்று அவர்கள் நினைக்கலாம்; வேறு பரிசோதனைகள் என்பதே பேசுவதற்கோ அல்லது யோசிப்பதற்கோ கூட தடை செய்யப்பட்ட விஷயமென்று சிலர் கருதலாம். கலைந்த வளர்கருவின் மீது உடற்கூறாய்வு செய்வதற்கு ஒப்புதலளிப்பதே பாவம் என்று கருதுகின்ற சில தம்பதிகள் இருக்கின்றனர். இதற்கு மாறாக, கருக்கலைவு ஏற்படுவதையும் மற்றும் அதைத்தொடர்ந்து நிகழும் அவசியமில்லாத அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தவிர்ப்பதன் மூலம் உயிர்களை காப்பாற்ற உதவுவதற்கு இந்த சிறப்பு சோதனைகள் சிறப்பான பங்களிப்பை வழங்குகின்றன. எனவே, துல்லியமான நோயறிதல் செயல்பாடு இருந்தால் மட்டுமே, இதற்குப் பிறகு கருத்தரிப்பு சரியாக நிகழ்வதற்கும், குழந்தைப் பேறுக்கும் ஒரு முறையான ஆலோசனையையும், பொருத்தமான திட்டத்தையும் மருத்துவர்களாகிய எங்களால் வழங்குவது சாத்தியமாகும்.
டாக்டர் வி.பாரதி
மகப்பேறு மருத்துவர், சென்னை.