Uterine fibroids | Diagnosis and Treatment
கரு வளர்ச்சியை தடுக்கும் சதைக் கட்டி!
இளம் பெண்களுக்கு, 'பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்' எனப்படும் நீர்க்கட்டிகளும், 35 வயதிற்கு மேல், 'பைப்ராய்டு' எனப்படும் சதைக் கட்டிகள் வருவதும், பல ஆண்டுகளாக பெண்கள் மத்தியில் பொதுவான பிரச்னையாக உள்ளது.
பைப்ராய்டு கட்டிகள், 30 - 50 வயதிற்குள் வருகிறது. கட்டி என்றதும், கேன்சர் என்று பயப்படுவது சகஜம்; ஆனால், இது 'கேன்சர்' கட்டி கிடையாது. இது, கேன்சராக மாறுவதற்கு 1 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகளே உள்ளன.
பைப்ராய்டு கட்டி வருவதற்கு, மரபியல் காரணி தான் பொதுவாக உள்ளது. இது தவிர, 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' அதிகம் சுரப்பதாலும் இந்த கட்டி வரலாம். நீர்க் கட்டி அதிகம் இருந்தாலும், குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பவர்கள், ஹார்மோன் சிகிச்சை எடுப்பதாலும் இக்கட்டிகள் வரலாம்.
மாதவிடாய் சுழற்சி 10 வயதிற்கு முன் ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகம் சுரக்கும். பைப்ராய்டு கட்டி உருவானதும், பெரிய அளவில் அறிகுறிகள் இருக்காது.
வேறு ஏதாவது காரணத்திற்காக 'ஸ்கேன்' பார்க்கும் போது தான், இக்கட்டி இருப்பது தெரியும். அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, மாதவிடாய் சமயத்தில் வலி இருக்கும். அதிக நாட்கள் ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும்; ரத்த சோகையும் இருக்கும்.
பைப்ராய்டு கட்டிகள் மூன்று வகைகளாக இருக்கும். ஒன்று, கர்ப்பப் பையின் வெளிப்புறம் வரலாம். கர்ப்பப் பைக்கும், வெளிப்புற அடுக்குக்கும் நடுவில் வரலாம். கர்ப்பப் பையின் உள்ளேயும் வரலாம். எங்கே இருக்கிறது, பிரச்னை என்ன, வயது என, இந்த மூன்றையும் பொறுத்து சிகிச்சை இருக்கும்; எல்லாருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை தர முடியாது.
மாதவிடாய் நின்ற பெண்ணுக்கு பைப்ராய்டு இருப்பது தெரிந்தால், கவலைப்பட அவசியம் இல்லை. இது கேன்சர் கட்டியாக மாறாது. இந்த சமயத்தில் இயல்பாகவே ஹார்மோன் அளவு குறைவதால், ரத்த ஓட்டம் குறைந்து, கட்டி சுருங்கி விடும். குழந்தை பெறும் வயதில், கர்ப்பப் பையின் உள்ளே கட்டி இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் அபாயமும், குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், கட்டியை அகற்ற வேண்டியதும் முக்கியம்.
கர்ப்பப் பையின் வெளிப்புறத்தில் இருந்தால், கர்ப்பம் தரிப்பதை பாதிக்காது. கர்ப்பப்பை வாயில் கட்டி இருந்தால், விந்தணு உள்ளே செல்வதை பாதிக்கும். கருக்குழாய் அருகில் இருந்தால், கரு முட்டையும், விந்தணுவும் இணைவதை பாதிக்கும்; கருப்பை உள்ளே இருந்தால், கரு தங்குவதை பாதிக்கும்; கரு வளர்வதையும் தடுக்கும்; இதனால் கருச்சிதைவு ஏற்படலாம்
கர்ப்ப காலத்தில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், கட்டியும் பெரிதாக வளரும்; இதனால் சிக்கல்கள் ஏற்படலாம். 5 செ.மீ.,க்கு மேல் கட்டி பெரிதாக இருந்தால், சிக்கல்கள் வரும். கட்டியின் தன்மையைப் பொறுத்தே சிகிச்சையை தீர்மானிக்க வேண்டும். எளிமையான, பல நவீன சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளன. வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டுமே, முடிந்த வரை அறுவை சிகிச்சையை கடைசி வாய்ப்பாக கொள்ள வேண்டும்.
டாக்டர் வி.பாரதி
மகப்பேறு மருத்துவர், சென்னை.